Friday, February 11, 2011

கனவுகள் மறுபடியும் ..........

வாசனை வீசிய கார்காலம்- மீண்டும்  
வாசல் வந்துதான் தட்டதா 
வடிந்து கிடக்கும் கானல் நீர் 
கடந்து எனைத்தான் செல்லாதா
மண்டிக் கிடக்கும் உன் சோலைகளில் 
மலிந்த மரம் ஒன்று உன் வாசல் விட்டு 
வெளியே வந்தும் உனைத் தேடுகிறேன் 
மீண்டும் உன் மடி சாய நாடுகிறேன் 

மழலையாய்
மகனாய்
மாணவனாய்
மாணவ தலைவனாய் 
எனைத் தந்தவள் நீயல்லவா....

வடித்து வைத்த கவிதைகளும் 
கிறுக்கி வைத்த கதைகளும் 
கல்லூரி மேசை தனிலே...
கடந்து போன காலங்களில் 
கரைந்து சில போயிருந்தாலும் 
அதன் நினைவுதனை சுமப்பவள் நீயல்லவா ....

கட்டவிழ்ந்த காளைகளை 
உந்தன் மண் தனிலே 
சுற்றித் திரிந்த போது சிறகடித்து 
பட்ட எம் காலின் காயத்தையும் 
மெத்தத் திரிந்த இந்த சுமைதனையும் 
பொறுத்தவள் அன்று நீயல்லவா....

எத்தனை முறை விழுந்த போதும் தட்டி எழுப்பி
சென்று வாடா என் மகனே என்றுரைத்து
நாம் வெற்றியின் சிகரங்கள் தொட்ட போது
எமை பார்த்து ரசித்தவள் நீயல்லவா ..... 

அன்று கண்ட நினைவுகள் நெஞ்சிடையே
அலையலையாய் வந்து மெல்ல மறைகிறதே 
சுற்றித் திரிந்த என் பாதங்கள் மீண்டும் வந்து 
உன் மடி மீது படிந்து விட துடிக்கிறதே 
அன்ரருமை நானுணரத் தவறிற்றனோ 
அந்த வாழ்வுதனை மீண்டும் நாடுகிறேன் 

பித்தனென மாறிவிட மாட்டேனோ -மீண்டும் 
நித்தமுந்தன் மடி நான் சாய மாட்டேனோ 
முத்தமிட்டு சொல்லுகிறேன் உன்னடி மண்ணை 
சத்தியமாய் உன்னை விட வேறொன்றில்லை .............

இப்படிக்கு  
ப்ரியமுடன் Prakhash

Friday, February 4, 2011

இன்று தான் இலங்கை விடிந்ததாம்........


                    
மாசி மாத தென்றல் காற்று 
மார்கழி குளிரோடு மார்பில் பட
படிந்து கிடந்த வெண் பனித்துளிகள்
பூ இதழ்களோடு காதல் உரைக்க 
மொட்டை மாடி வாயிலிலே 
காடாய் கிடந்த கடற்கரை நோக்கியபடி 
காத்திருக்கிறேன்

அழகிய கடற்கரையில் ஆங்கங்கே
அழுக்காக்கி கொண்டிருக்கும் தெருநாய்கள்
நிசப்தமான வீதிகளில் 
ஓசை இன்றி சில மனிதர்கள்
என்ன ஆயிற்று இன்று.....

காலையும் ஓடிக்கொண்டிருக்கிறது
கடற்கரையில் காதலர்களை காணோமே
"சுனாமி" என்று உரைத்த போதும்
 தான் நிலம் மறக்கத் தவிர்த்தவர்கள்
இன்று மட்டும் இருப்பிடம் மறந்ததேன்

"அன்றொரு திங்களில் 
இன்று போலொரு நாளில் தான் 
என் நாடும் விடிந்ததாம்"
அங்கே ஒரு கிழவன் பிதற்றியபடி
கொஞ்சம் பெருமிதத்துடன்  
வேறு வெட்டி வேலை இல்லை 
அவனருகில் சென்றேன் 
என்னவென்று விடுப்பறிய

"இன்று தானடா தம்பி 
இலங்கைக்கு சுதந்திரம் கொடுத்தார்கள் "
புன்னகையுடன் அவன் முகம் 
"அப்படியா தாத்தா
எவ்வளவு காசு கொடுத்தார்கள்
அதை வாங்குவதற்காக"
அறியாச் சிறுவனில்லை 
ஆனபோதிலும் கேட்டு விட்டேன் 
அவன் முகம் வெம்பியதையும் 
காண நான் தவறவில்லை 

இப்படி ஒரு நாளா
கண்ணுக்கு கூட ஒன்றும் 
காதல் தரவில்லையே 
கவலையுடன் திரும்புகிறேன் 
வீதி ஓரத்தில் இன்னொருவன்
அவனும் பிதற்றுகிறான்..........

               இப்படிக்கு
             ப்ரியமுடன்............ Prakhash

Wednesday, February 2, 2011

மறுபடியும் ............


கனவுகள் ஆயிரம் கதைகள் சொல்லும் 
கவிதைகள் ஆயிரம் கனவுகளை சொல்லும் 
கவிதைகளும் கதைகளுமே ஆன உலகத்தில் 
கலங்கிய நீரோடை நினைவுகளுடன் 
அம் மனை வீதி வழியே 
நாட்கள் பல கழிந்து ..........

அமர்ந்து அலட்டிய சுவர்க்கரைகள் 
ஆளில்லாமல் இன்று தனிமையிலே 
எத்தனை நாட்களை கடந்திருப்போம் 
அம்மாவின் திட்டுப் பேச்சுகளுடன் அதன்மீது 
நாட்கள் ஆயிரம் கடந்து போனாலும் 
நினைவுகள் காலவதியின்றி நெஞ்சோரத்தில் 

குட்டிக் கதைகள் பேசிய
குட்டிச்சுவர் மீது அன்று 
எழுதி வைத்த கிறுக்கல்கள் மட்டும் 
இன்று ஏனோ பொக்கிஷங்களாய் 
தொட்டுப் பார்க்கிறேன் மெல்ல......

வெளியே போகிறேன் என்றேன் 
"ஏழு கழுதை வயசாய்ப் போச்சு 
இன்னுமா போகிறாய் ஊர் மேய"
என் அம்மாவின் அதட்டல் குரல் 
சமையலறை வாசல் வழியே

"உன் போன்ற பெடியங்கள் இன்று 
ஆயிரமாயிரமாய் கை மேலே 
உனக்கு மட்டும் இங்கே தண்டமாய்"
மேலும் ஒரு குரல் காதில் விழ 

சட்டை செய்யாமல் 
சட்டையை மாட்டிக் கொண்டு 
வெளியே போன போது 
"உன் வீட்டிலுமாடா இப்படி"
என்றான் ஒரு நண்பன் 
நிம்மதியுடன்  மனம் 
அன்று சிறகடித்த நினைவுகள்
இன்று என் மனதின் ஓரம்
அனல் காற்றாய்

எத்தனை காலைகள்
எத்தனை மாலைகள் 
கட்டாம் தரை சாலைகளிலும் 
கடற்கரை ஓரங்களிலும் 
காரணமின்றி ஒரே பாதை வழியே 
தேய்ந்து போன பாதணிகள் 
இன்றும் அந்த கதைகள் சொல்லும் 

மீண்டும் 
அம்மனை வீதி வழியே 
நினைவுகளில் மூழ்கிய போது 
"யாரப்பா அங்கே "
எங்கேயோ கேட்ட குரல் 
கனவுகளை மீண்டும் நிஜமாக்க 
ஒலி வழி நோக்கி புன்னகையுடன் 
குட்டி சுவர் மறுபடியும் 
எனை பார்த்து சிரிக்கிறது .............

                             இப்படிக்கு 
                                 அன்புடன்......... Prakhash